Things to Do Before Going for the Exam.

Discover important things to do before going for the exam to stay prepared, reduce stress, manage time effectively, and improve your performance.


பரீட்சைக்கு தயாராகும் முக்கிய குறிப்புகள்

01. நம்பிக்கை கொள்க

பரீட்சைக்கான பாடப்பரப்பில் எவ்வளவு பகுதிகளை நீங்கள் முழுமையாக கற்றுள்ளீர்கள் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். எனவே, கற்றுள்ள பகுதிகளில் இருந்து எந்தவொரு கேள்வியும் வந்தாலும், அதை தன்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் பரீட்சைக்கு செல்ல வேண்டும். இந்த நம்பிக்கை, பரீட்சை மண்டபத்தில் மன உறுதியையும் அமைதியையும் அதிகரித்து, நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த உதவும்.

02. உணர்ந்து கொள்க

நீங்கள் முழுமையாக கற்றிருக்காத பாடப்பகுதிகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் வந்தால், அவற்றை முழுமையாகச் செய்ய முடியாமல் போகலாம் என்பதை முன்னதாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கேள்விகளில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து, தெரிந்த கேள்விகளில் கவனம் செலுத்த முடியும்.

03. முன்னாயத்தங்கள் செய்யவும்

பரீட்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் முன்தினமே ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். எழுதுகருவிகள், கணக்குப்பெட்டி, அடையாள அட்டை போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். கூடுதலாக எழுதுகருவிகளை வைத்திருப்பது நல்லது. அதேபோல், அணிய வேண்டிய ஆடை மற்றும் பாதணிகளையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்தால், பரீட்சை நாளில் தேவையற்ற மன அழுத்தம் மற்றும் அவசர நிலைகளை தவிர்க்க முடியும்.

04. தூக்கத்தைக் கெடுப்பதைத் தவிர்க்க

பரீட்சைக்கு முன்தினம் குறைந்தது 6 மணி நேரம் நல்ல தூக்கம் பெறுவது அவசியம். பரீட்சை பயம் அல்லது பதட்டம் காரணமாக தூக்கத்தை கெடுத்துக்கொள்வது, அடுத்த நாள் சோர்வு, மனஅழுத்தம் மற்றும் கவனக்குறைவை ஏற்படுத்தும். சில நேரங்களில் பரீட்சை மண்டபத்திற்கு நேரத்தில் செல்ல முடியாத நிலையும் உருவாகலாம்.

05. மெதுவான உணவுகளை உட்கொள்க

பரீட்சை காலத்தில் எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிக எண்ணெய், காரம் மற்றும் சந்தேகத்துக்கிடமான உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் உடல் நலத்தையும், மன உறுதியையும் மேம்படுத்தி, பரீட்சையில் சிறப்பாக செயல்பட உதவும்.

06. பழையவற்றை மீள்பார்வை செய்யவும்

பரீட்சைக்கு முன் உள்ள நேரத்தில் முன்பு கற்ற பாடங்களை மீட்டுப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாகும். அதற்காக short notes மற்றும் mind maps பயன்படுத்தலாம். முழு பாடத்தையும் மீண்டும் வாசிப்பதை விட, பழைய வினாத்தாள்களை செய்து பயிற்சி பெறுவது நேரத்தைச் சேமிக்கும் மற்றும் திறனை மேம்படுத்தும்.

07. புதியவற்றை கைவிடுக

பரீட்சை காலத்தில் புதிய பாடங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது தேவையற்ற மனஅழுத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ஏற்கனவே கற்றவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது. புதியவற்றை கற்க முயல்வதை விட, பழைய குறிப்புகளை மீண்டும் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment